கொடுக்கூர் அரசு பள்ளியில் அடிப்படைவசதிகள் செய்து தரக்கோரி பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
கொடுக்கூர் அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம் செய்தனர்
விழுப்புரம்
அடிப்படை வசதிகள் இல்லை
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கொடுக்கூரில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 182 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டிடம் ஏற்கனவே மிகவும் பழுதடைந்து எந்தநேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் கடந்த 5 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுபோல் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாணவர்கள் போராட்டம்
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் இப்பள்ளி கட்டிடம் மேலும் சேதமடைந்தது. இதனால் நேற்று முன்தினம் மாணவ- மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. பின்னர் நேற்று காலை 9.30 மணியளவில் மாணவ- மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், பள்ளியின் முன்பு திரண்டு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது பள்ளியில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் உள்ளிட்ட மற்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரகுகுமார், தனி தாசில்தார் தயாளன், கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் உமாராணி மற்றும் கண்டமங்கலம் போலீசார் அங்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பள்ளி கட்டிடத்தை சீரமைப்பதோடு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று மாணவர்களும், பெற்றோரும் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து, மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாணவ- மாணவிகள் வகுப்புக்கு சென்றனர்.
Related Tags :
Next Story