மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
நாமக்கல், நவ.17-
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் கூறியுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 25 மில்லி மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 10 மில்லி மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மில்லி மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 4 கி.மீ.வேகத்தில் வடக்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 87,8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 65 சதவீதமாகவும், அதிகபட்சமாக 90 சதவீதமாகவும் இருக்கும்.
குளம்பு சிதைவு நோய்
சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் தற்போது நிலவும் வானிலையால் கால்நடைகளுக்கு குளம்பு சிதைவு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கு சுத்தமில்லாத தொழுவத்தில் உள்ள ஈரமான சாணம், சேறு காரணமாக காலில் புண் ஏற்படும். இதில் பாக்டீரியாக்கள் தங்கி வளரும். இந்நோய் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
கோழிகளில் கியாஸ்டிரிடியம் பாக்டீரியா மூலம் குடற்புண் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா கோழி கொட்டகையில் எச்சம், தீவனம், ஆழ்கூளம், தூசிகள் உள்ள எல்லா இடங்களிலும் பரவி உள்ளது. இதுதவிர கோழிகளின் குடலிலும் இக்கிருமிகள் காணப்படுகின்றன.
குடற்புழு நீக்கம்
திடீரென தீவனத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது குடலில் ஏற்படும் ரத்த கழிச்சல், பூஞ்சான நச்சுகள் மற்றும் குடற்புழுக்கள் போன்ற காரணங்களினால் கோழிகளில் குடற்புண் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். தற்போது நிலவும் தொடர்மழை காலத்தில் ரத்த கழிச்சல் மற்றும் குடற்புண் நோய்கள் ஆழ்கூளம் முறையில் குறைந்த இடத்தில் அதிக கோழிகளை வளர்க்கும் போது உண்டாக வாய்ப்புகள் அதிகம்.
இந்த நேரத்தில் கோழிகளுக்கு கருவாடு, மீன், கோதுமை போன்ற தீவன பொருட்கள் பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும். குறிப்பாக நாட்டுக்கோழிகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். தீவனத்தை பரிசோதனைக்கு பிறகு பயன்படுத்துவது சிறந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story