வாலிபர் அடித்துக்கொலை


வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 16 Nov 2021 11:01 PM IST (Updated: 16 Nov 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

வாலிபர் அடித்துக்கொலை

குமாரபாளையம், நவ.17-
குமாரபாளையத்தில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்குமூட்டையில் கட்டி காவிரி ஆற்றில் கொடூரமாக வீசிய அண்ணன்- தம்பி கைது செய்யப்பட்டனர்.
இந்த பயங்கர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஜவுளி நிறுவன ஊழியர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தம்மண்ணசெட்டி தெருவை சேர்ந்தவர் அரவிந்தன் என்ற தினேஸ்வரன் (வயது 24). திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 14-ந் தேதி திருமண நிகழ்ச்சிக்கு ஒன்று சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
பெற்றோர், உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அரவிந்தனை, அவருடைய நண்பர் வெங்கடேஷ் அடித்துக் கொலை செய்ததாக தகவல் பரவியது.
சாலைமறியல்
இந்த தகவல் அறிந்த அரவிந்தனின் பெற்றோரும், உறவினர்களும் வெங்கடேஷ் வீட்டுக்கு சென்று அரவிந்தன் பற்றி கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்த குமாரபாளையம் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இதுதொடர்பாக வெங்கடேசை கைது செய்யக்கோரி அரவிந்தனின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதுடன், சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
அண்ணன்- தம்பி கைது
இந்தநிலையில் அரவிந்தனை வெங்கடேஷ், அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் இருவரும் அடித்துக்கொலை செய்தது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-
அரவிந்தனும், வெங்கடேசும் ஒரே பகுதியில் வசித்து வந்ததால் நண்பர்களாக இருந்தனர். வெங்கடேஷ் மனைவியிடம், அரவிந்தன் தகாத முறையில் நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வெங்கடேஷ், அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் இருவரும் அரவிந்தனை அழைத்து கேட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அடித்துக்கொலை
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், அவருடைய தம்பி கிருஷ்ணராஜ் இருவரும் அரவிந்தனை தாக்கினர். இதில் அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உடனே அண்ணன்- தம்பி இருவரும் கொலையை மறைக்க முடிவு செய்தனர். அரவிந்தன் உடலை ஒரு சாக்குமூட்டையில் கட்டினர். பின்னர் பழையபாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர்.
காவிரி ஆற்றில் வீச்சு
அங்குள்ள காவிரி ஆற்றில் அரவிந்தன் உடலை கட்டி இருந்த சாக்கு மூட்டையை வீசினர். அதன்பிறகு ஒன்றும் தெரியாதது போல் இருந்து கொண்டனர். தற்போது போலீஸ் விசாரணையில் அண்ணன்-தம்பி இருவரும் அரவிந்தனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆற்றில் உள்ள அனைத்து மதகுகளும் திறந்த நிலையில் உள்ளது. எனவே அரவிந்தன் உடல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு இருக்கும். ஆனால் எந்த பகுதிக்கு சென்று இருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் விசாரணை
இருந்தாலும் வெங்கடேஷ், அவருடைய தம்பி இருவரையும் போலீசார் உடல் வீசியதாக கூறப்படும் காவிரி ஆற்று பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு உடல் மூட்டையில் கட்டி காவிரி ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story