கல்உப்புக்கு கடும் கிராக்கி


கல்உப்புக்கு கடும் கிராக்கி
x
தினத்தந்தி 16 Nov 2021 11:09 PM IST (Updated: 16 Nov 2021 11:09 PM IST)
t-max-icont-min-icon

மழை சீசன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் கல்உப்புக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. விலையும் உயர்ந்துள்ளது.

பனைக்குளம், 
மழை சீசன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதால் கல்உப்புக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. விலையும் உயர்ந்துள்ளது.
உப்பு உற்பத்தி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைக்குளம் அருகே நதிப் பாலம், உப்பூர், திருப்பாலைக்குடி, சாயல்குடி அருகே வாலி நோக்கம் திருப்புல்லாணி உள்ளிட்ட ஊர்களில் பல ஏக்கர் பரப்பளவில் உப்பள‌பாத்திகள் உள்ளன. அங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்தியும் முழுமையாக பாதிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப் பட்டு உள்ளது. இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு மேலாக மழை சற்று ஓய்ந்து வெயில் அடித்து வருவதால் பனைக்குளம் அருகே உள்ள நதிப்பாலம் உப்பளங்களில் இருந்து ஏற்கனவே பிரித்தெடுத்து மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த கல் உப்பை சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்து லாரி களில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுபற்றி உப்பளத் தொழிலாளி ஒருவர் கூறும்போது, மழை சீசன் தொடங்கி உள்ளதால் உப்பளங்களில் மழை நீர் அதிகஅளவு தேங்கி உள்ளதால் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மழை சீசன் முடிந்த பின்னர் இனி வருகிற பிப்ரவரி மாதம்தான் மீண்டும் உப்பு உற்பத்தி செய்யும் பணி தொடங்கும்.
விலை உயர்வு
ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு பாதுகாப்பாக பெரிய பாலிதீன் கவர்களால் மூடி வைக்கப்பட்டிருந்த கல் உப்பை கேரளா உள்ளிட்ட பல ஊர்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு டன் ரூ.2 ஆயிரத்து 500-க்கு மட்டுமே விலை போன நிலையில் தற்போது மழை சீசன் தொடங்கி உள்ளதால் உப்புக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன் ஒரு டன்னுக்கு ரூ. 500 விலை உயர்ந்துள்ளது. இன்னும் நாட்கள் செல்ல செல்ல கல் உப்பு விலை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story