மலையில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
வேலூரில் பாறை விழுந்து 2 பேர் பலியானதை தொடர்ந்து மலை மற்றும் அதன் அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. பாறையை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர்
வேலூரில் பாறை விழுந்து 2 பேர் பலியானதை தொடர்ந்து மலை மற்றும் அதன் அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. பாறையை அகற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
வேலூர் காகிதப்பட்டறை டான்சி நிறுவனம் பின்புறம் உள்ள மலையில் இருந்து கடந்த 14-ந் தேதி பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில், வீட்டில் வசித்த பிச்சாண்டியின் மனைவி ரமணி மற்றும் அவருடைய மகள் நிஷாந்தி ஆகியோர் கட்டிட இடுபாடுகளில் சிக்கி கொண்டனர். சுமார் 9 மணி நேரம் தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப்படையினர், வருவாய்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டிட இடுபாடுகளில் சிக்கிய ரமணி, நிஷாந்தி ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து வேலூரில் மலை மற்றும் மலையடிவாரங்களில் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் குறித்து கணக்கெடுக்கும்படியும், மேலும் விழுந்த பாறையின் அருகே உள்ள வீட்டில் வசிப்பவர்களை வேறு இடம் அல்லது அரசுப்பள்ளியில் தங்க வைக்கவும் வருவாய்த்துறையினருக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று காகிதப்பட்டறை மலை மற்றும் மலையடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
அதிகாரிகள் ஆய்வு
வேலூர் தாசில்தார் செந்தில் தலைமையில் வருவாய் ஆய்வாளர் யுவராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பாறை விழுந்த இடத்தின் அருகே வசிப்பவர்களை வேறு இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். பின்னர் மலை மற்றும் மலையடிவாரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் அங்கு வசிப்பர்கள் எண்ணிக்கை, அவர்களுக்கு வேறு பகுதியில் சொந்தமாக இடம் அல்லது வீடு உள்ளதா என்பது உள்பட பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர்.
இதற்கிடையே கலெக்டரின் உத்தரவின்பேரில் கனிமவள உதவி இயக்குனர் பெர்னான்ட் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் காகிதப்பட்டறை மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறையை அகற்றுவது தொடர்பாக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் மலையடிவாரத்தில் ஆபத்தான நிலையில் காணப்படும் பாறைகள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலையை பார்வையிட்டனர். மலை மற்றும் மலை அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்னர் பொதுமக்களுக்கு பாதிப்பு இன்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story