பெண்கள் கைது செய்யப்பட்டதில் அத்துமீறல் எதுவும் இல்லை; சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
மதுபானக்கடையை சூறையாடிய விவகாரத்தில் பெண்கள் சட்டப்படி தான் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அத்துமீறல் எதுவும் இல்லை என்று சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு:மதுபானக்கடையை சூறையாடிய விவகாரத்தில் பெண்கள் சட்டப்படி தான் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அத்துமீறல் எதுவும் இல்லை என்று சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா தெரிவித்துள்ளார்.
மதுபானக்கடை சூறையாடல்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா எம்மேதொட்டி அருகே முஸ்லாம்புரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மால்தேஷ் என்பவர் மதுபானக்கடை நடத்தி வருகிறார். மதுபானக்கடையை அகற்றும்படி, கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், மதுபானக்கடை முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கட்டத்தில் மதுபானக்கடை உரிமையாளர் மால்தேஷ், ஊழியர்கள் போராட்டம் நடத்திய பெண்களை தாக்கியுள்ளனர். இதில் 6 பெண்கள் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சக பெண்கள், இளைஞர்கள் மதுபானக்கடையை சூறையாடினர்.
அவர்கள் நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். இதைதொடர்ந்து கடந்த 15-ந்தேதி இரவு, கடூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரம்யா தலைமையிலான போலீசார் கிராமத்திற்கு சென்று மதுபானக்கடையை சூறையாடிய சம்பவத்தில் தொடர்புடைய ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி, 6 பெண்களை வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து அதிரடியாக கைது செய்தனர். இதனால் போலீசார், மதுபானக்கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கி விட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
சட்டப்படி கைது
இந்த சம்பவம் தொடர்பாக சிக்கமகளூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடூர் தாலுகா எம்மேதொட்டி அருகே முஸ்லாம்புரா கிராமத்தில் மதுபானக்கடை சூறையாடிய சம்பவத்தில் சட்டப்படிதான் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்ட நேரமாக கதவை திறக்காததால் போலீசார், வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே நுழைந்து சிறுமி உள்பட 7 பெண்களையும் கைது செய்தனர். இதே பெண்கள், மதுபானக்கடையை அகற்றக்கோரி கிராமத்தில், கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியபோது அவர்களுக்கு போலீசார் தான் பாதுகாப்பு கொடுத்தனர்.
மதுபானக்கடை உரிமையாளர் உரிய சான்றிதழ் வைத்து இருக்கும்போது சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து சூறையாடிதால் தான் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் போலீஸ் அத்துமீறல் எதுவும் இல்லை.
நக்சலைட்டுகள்...
கைதான நக்சலைட்டுகள் கிருஷ்ணமூர்த்தி, சாவித்ரியை கேரள போலீசார் பிடிவாரண்டு பெற்று அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி மீது கர்நாடகத்தில் 30 வழக்குகள், சாவித்ரி மீது 6 வழக்குகள் உள்ளது. மேலும் இவர்களுக்கு விக்ரம்கவுடா, முண்டகாருலதா ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story