மருத்துவ மாணவர்-மாணவி மீது தாக்குதல்; 6 பேர் கைது
மங்களூருவில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற மருத்துவ மாணவர் மற்றும் மாணவியை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு: மங்களூருவில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற மருத்துவ மாணவர் மற்றும் மாணவியை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாணவர்-மாணவி மீது தாக்குதல்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே முக்கா பகுதியில் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் முகமது யாசின் என்ற மாணவர் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அதேபோல் இவருடன் மாணவி ஒருவரும் படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் முகமது யாசின், அந்த மாணவியுடன் வெளியே சென்றுள்ளார். அவர்கள், சூரத்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது 6 பேர் கொண்ட கும்பல், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அந்த கும்பல், 2 பேரிடமும் பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளனர். இதனால் 2 பேரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதை கும்பல் தெரிந்து கொண்டது. இதையடுத்து அவர்கள், மருத்துவ மாணவர் முகமது யாசினையும், மாணவியையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் 2 பேரும் காயம் அடைந்தனர்.
6 பேர் கைது
இதுபற்றி அவர்கள் சூரத்கல் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவ மாணவர், மாணவியை தாக்கிய 6 பேரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் பிரசாந்த், பிரகலாத் ஆச்சார்யா, குருபிரசாத், பிரதீஷ் ஆச்சார்யா, பரத் செட்டி மற்றும் சுகேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த மாணவரும், மாணவியும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றியதால் லவ் ஜிகாத் என்று கருதி தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர்கள், என்ன காரணத்திற்காக மருத்துவ மாணவர், மாணவியை தாக்கினர் என்பது தெரியவில்லை. கைதான 6 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story