தங்க வர்த்தகத்தில் முதலீடு செய்து ரூ.8 லட்சம் இழந்த வாலிபர்
பெங்களூருவில் தங்க வர்த்தகத்தில் முதலீடு செய்து ரூ.8 லட்சம் இழந்த வாலிபர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
பெங்களூரு: பெங்களூருவில் தங்க வர்த்தகத்தில் முதலீடு செய்து ரூ.8 லட்சம் இழந்த வாலிபர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
தங்கத்தின் மீது முதலீடு
பெங்களூரு பிரிகேட் ரோட்டை சேர்ந்தவர் சையது (வயது 34). சமீபத்தில் இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் தங்க வர்த்தகத்தில் பண முதலீடு செய்தால், முதலீடு செய்த பணத்தை விட 2 மடங்கு அதிகமாக கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் சையதுவின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ஒரு பெண், நான் உங்களுக்கு ஒரு லிங்க்கை அனுப்பி வைக்கிறேன். அந்த லிங்க்கை திறந்து அதில் ரூ.500 செலுத்தி எங்களது உறுப்பினராக சேர்ந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
இதையடுத்து ரூ.500 செலுத்தி அந்த வர்த்தக முதலீட்டு உறுப்பினராக சையது சேர்ந்தார். பின்னர் அவர் ரூ.25 ஆயிரத்தை தங்கத்தின் மீது முதலீடு செய்து உள்ளார்.
ரூ.8 லட்சம் மோசடி
அவருக்கு ரூ.30 ஆயிரம் லாபம் கிடைத்து உள்ளது. பின்னர் ரூ.2 லட்சத்தை தங்கத்தின் மீது சையது முதலீடு செய்தார். அப்போது அவர் முதலீடு செய்த பணம் 4 மடங்காக உயர்ந்து ரூ.8 லட்சமாக இருந்தது. அந்த பணத்தை எடுக்க சையது முயன்றார். ஆனால் முடியவில்லை. மேலும் ரூ.6 லட்சம் செலுத்தினால் தான் ரூ.8 லட்சத்தை எடுக்க முடியும் என்று குறுந்தகவல் வந்தது.
இதனால் அவர் கடன் வாங்கி ரூ.6 லட்சத்தை தங்கத்தின் மீது முதலீடு செய்தார். ஆனாலும் சேவை வரியாக ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும் என்று மீண்டும் குறுந்தகவல் வந்தது. அப்போது தான் தன்னிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்யப்பட்டதை சையது உணர்ந்தார். இதுகுறித்து அவர் மத்திய சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார்.
Related Tags :
Next Story