போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற டிரைவர் சுட்டுப்பிடிப்பு
கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்ற போது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பிஓட முயன்ற டிரைவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.
பெங்களூரு:கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்ற போது, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டு தப்பிஓட முயன்ற டிரைவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.
ஆயுதங்களால் தாக்கி கொலை
பெங்களூரு பானசாவடி அருகே ராமசாமிபாளையாவில் வசித்து வந்தவர் ஸ்ரீதர்(வயது 35). இவர் ஆயத்த ஆடை தொழிற்சாலை நடத்தி வந்தார். மேலும் மனித உரிமைகள் பாதுகாப்பு ஆர்வலராகவும், ஊழல் இல்லா அமைப்பின் பெங்களூரு நகர துணை தலைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி ஸ்ரீதர் தனது காரில் நாகவாரா ரிங் ரோட்டில் உள்ள இணைப்பு சாலையில் சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் காரை பின்தொடர்ந்து வந்த 4 பேர், ஸ்ரீதரை நடுரோட்டில் வைத்து கத்தி, வாளால் தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.
சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
இந்த நிலையில் ஸ்ரீதர் கொலை வழக்கில் பில்லா ரெட்டி நகரை சேர்ந்த கார் டிரைவரான ரகு(30) என்பவரை போலீசார் கைது செய்து இருந்தனர். விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஸ்ரீதர் கொலையானது தெரியவந்தது. இந்த நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ராமமூர்த்திநகர் அருகே ஹெண்ணூர் மெயின் ரோட்டில் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருப்பதாக ரகு போலீசாரிடம் கூறினார்.
இதனால் அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய நேற்று அதிகாலை ரகுவை, அந்த இடத்திற்கு ஹெண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் லிங்கராஜ் தலைமையிலான போலீசார் அழைத்து சென்றனர். அப்போது ஒரு இடத்தில் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லிங்கராஜை, ரகு தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.
துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடைந்துவிடும்படி ரகுவுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவர் சரண் அடைய மறுத்ததுடன் மீண்டும் போலீசாரை தாக்க முயன்றார். இதனால் வசந்தகுமார் துப்பாக்கியால் ரகுவை நோக்கி சுட்டார். இதில் அவரது வலது காலில் குண்டு துளைத்தது. இதனால் அவர் அங்கே சுருண்டு விழுந்தார்.
பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபோல ரகு தாக்கியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் லிங்கராஜூம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து ஹெண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
தற்காப்புக்காக....
இதுகுறித்து கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறுகையில், கொலை வழக்கில் கைதான ரகு, மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்ய போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஆயுதங்களால் ஹெண்ணூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிங்கராஜூவை தாக்கியதோடு சக போலீஸ்காரர்களையும் தாக்க முயன்று உள்ளார். இதனால் தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் துப்பாக்கியால் சுட்டு ரகுவை பிடித்து உள்ளார் என்று கூறியுள்ளார்.
கொலை வழக்கில் கைதானவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்ப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story