நம்பியாறு அணை-மானூர் பெரியகுளம் நிரம்பியது


நம்பியாறு அணை-மானூர் பெரியகுளம் நிரம்பியது
x
தினத்தந்தி 17 Nov 2021 3:27 AM IST (Updated: 17 Nov 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நம்பியாறு அணை, மானூர் பெரியகுளம் நிரம்பியது.

நெல்லை,:
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதில் பாபநாசம், சேர்வலாறு, கொடுமுடியாறு அணைகள் உச்ச நீர்மட்டத்தை எட்டி விட்டதால், உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதே போல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக ராதாபுரம் அருகே நம்பியாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள நம்பியாறு அணையும் நேற்று நிரம்பியது.

நம்பியாறு அணையின் மொத்த உயரம் 22.96 அடியாகும். நேற்று காலை 8 மணி நிலவரப்படி நம்பியாறு அணை உச்ச நீர்மட்டத்தை எட்டி நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு 210 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

மானூர் பெரியகுளம்

இதற்கிடையே, நெல்லை அருகே உள்ள மானூர் பெரியகுளமும் நேற்று நிரம்பியது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரிய குளங்களில் ஒன்றான மானூர் பெரியகுளம் தனது முழு கொள்ளளவான 190 மில்லியன் கன அடியை எட்டி உள்ளது. இதன்மூலம் மானூர், மாவடி, மதவகுறிச்சி மற்றும் எட்டான்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். கடந்த 2019-ம் ஆண்டு கடைசியாக பெரியகுளம் நிரம்பியது. தற்போது இந்த ஆண்டு குளம் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

இதைத்தொடர்ந்து விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். நிலத்தை உழுது நாற்று நடுவது போன்ற பணிகள் வேகமாக நடைபெறுகிறது. மறுகால் பாயும் பகுதியில் வெளியூர் மக்கள் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

3,528 கனஅடி நீர் வெளியேற்றம்

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,693 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து வினாடிக்கு 3,528 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனுடன் இணைந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் 148.42 அடியாக இருந்தது.

பொதுமக்கள் குளித்தனர்

பாபநாசம் அணை தண்ணீர், தென்காசி மாவட்டம் கடனாநதி அணை, ராமநதி அணைகளின் உபரி நீர் மற்றும் காட்டாற்று தண்ணீர் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தது.

ஆனால், கடந்த 2 நாட்களாக மழை குறைந்திருந்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு நேற்று குறைந்தது. தாமிரபரணி ஆற்றில் ஏற்கனவே குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. வெள்ளப்பெருக்கு குறைந்ததால் நேற்று பொதுமக்கள் ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகளுக்கு சென்றனர். அங்கு துணிகளை துவைத்து குளித்துவிட்டு சென்றனர்.

அணைகள் நிலவரம்

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 90.10 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 742 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்துக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. 50 அடி உயரம் கொண்ட வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 24.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 53 கன அடியாக உள்ளது.
கொடுமுடியாறு அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 100 கனஅடி தண்ணீர் அப்படிேய பாசன கால்வாய்களில் திறந்து விடப்பட்டு உள்ளது.

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. பாதுகாப்பு கருதி அணைக்கு வருகிற 335 கன அடி தண்ணீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 50 கனஅடி தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டுள்ளது.
கருப்பாநதி அணை நீர்மட்டம் உச்சத்தை எட்டி விட்டதால், அணைக்கு வருகிற 131 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. குண்டாறு அணை மற்றும் அடவிநயினார் அணைகள் நிரம்பி விட்டதால் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம் -2, சேர்வலாறு -1, கொடுமுடியாறு -5, ராதாபுரம் -3. கடனா -6, கருப்பாநதி -3, குண்டாறு -4, அடவிநயினார் -15, செங்கோட்டை -1, தென்காசி -5, சிவகிரி -1.



Next Story