குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விரைவில் மேம்படுத்தப்படும்-அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்


குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விரைவில் மேம்படுத்தப்படும்-அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 17 Nov 2021 4:14 AM IST (Updated: 17 Nov 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விரைவில் மேம்படுத்தப்படும் என்று சேலத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.

சேலம்:
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விரைவில் மேம்படுத்தப்படும் என்று சேலத்தில் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை சேலம் மண்டல வனத்துறை அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா சிங் (நாமக்கல்), முதன்மை தலைமை வன பாதுகாவலர் சேகர் குமார் நீராஜ், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:-
விவசாயிகளுக்கு வனவிலங்குகளால் ஏற்படுகின்ற பிரச்சினைகள், அதனால் ஏற்படுகின்ற இழப்புகளை தவிர்க்கும் வகையில் விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வனப்பகுதியில் அவசியமான சாலைகளை அமைக்கவும் மற்றும் வனச்சரகத்தில் வசிக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்து சட்டத்திற்குட்பட்டு விரைவாக தீர்வு காணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
33 சதவீதம் அதிகரிக்க...
தமிழகத்தில் குறைந்தது 10 ஆண்டுகளுக்குள் வனப்பகுதிகளை 33 சதவீதமாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பசுமை காலநிலை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. வனத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் இணைந்து முயற்சி செய்தால் மட்டுமே அந்த 33 சதவீத இலக்கை எய்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது கைக்குழந்தையுடன் சிக்கிக்கொண்ட பெண்ணை தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய 5 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் மலையேறும் உபகரணங்களை அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார். மேலும் ரூ.85 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் 30 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
குரும்பப்பட்டி பூங்கா
எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், டாக்டர் பொன்.கவுதம சிகாமணி, சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், பொன்னுசாமி, முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சேலம் மண்டல வனப் பாதுகாவலர் பெரியசாமி, சேலம் வன அலுவலர் கவுதம், நாமக்கல் வன அலுவலர் ராஜாங்கம், சேலம் கோட்ட வன அலுவலர் சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு விலங்குகளால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக 2 ஆயிரத்து 922 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கான இழப்பீடு கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை. இந்த இழப்பீட்டை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வனப்பகுதிகளை அதிகரிக்க நிபுணர் குழு மூலம் மண் சார்ந்த மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விலங்குகளுக்கு தேவையான உணவு முறைக்கு ஏற்ப தேவையான உணவுப்பயிரிகள் பயிரிடப்படும்.
சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா காரணமாக சுற்றுலா இடங்களை மேம்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் மேம்பாட்டு பணிகள் விரைவாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story