தொழிலாளி தற்கொலை வழக்கில் அண்ணன்-தம்பிகள் உள்பட 4 பேர் கைது


தொழிலாளி தற்கொலை வழக்கில் அண்ணன்-தம்பிகள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2021 4:14 AM IST (Updated: 17 Nov 2021 4:14 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி தற்கொலை வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன்-தம்பிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்னதானப்பட்டி:
தொழிலாளி தற்கொலை வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அண்ணன்-தம்பிகள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளி தற்கொலை
‌ சேலம் நெத்திமேடு கே.பி.கரடு வடபுறம், வக்கீல் செட்டியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 34). இவர் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பட்டறையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவருடைய நண்பர் ஜெகதீஷ் (29) என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெகதீசுடன் வந்திருந்த அண்ணன் சதீஷ் (35), தம்பி  விக்னேஷ் (25), மற்றும் நண்பர் பூமிநாதன் (26) ஆகியோரும் சேர்ந்து மூர்த்தியுடன் வாக்குவாதம், கைகலப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
இதில் ஜெகதீஷ் தரப்பினர் மூர்த்தியை தாக்கி உள்ளனர். இதனால் மனவேதனையில் வீட்டுக்கு சென்ற மூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 பேர் கைது
தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என்று மூர்த்தியின் உறவினர்கள் மறுப்பு  தெரிவித்தனர். 
இதையடுத்து அவர்களிடம் சமாதானம் பேசிய போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மூர்த்தியின் உடலை பெற்றுக்கொண்டனர்.
இதனிடையே மூர்த்தியை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெகதீஷ், விக்னேஷ், சதீஷ், பூமிநாதன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் அவர்களை நேற்று கைது செய்தனர். 

Next Story