தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதிக்கும்: கர்நாடகா, கேரளாவில் புதிய அணையை கட்ட அனுமதிக்க மாட்டோம்-அமைச்சர் துரைமுருகன் பேட்டி
தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் புதிய அணையை கட்ட கர்நாடகா, கேரளாவை அனுமதிக்க மாட்டோம் என்று மேட்டூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேட்டூர்:
தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் வகையில் புதிய அணையை கட்ட கர்நாடகா, கேரளாவை அனுமதிக்க மாட்டோம் என்று மேட்டூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அமைச்சர் ஆய்வு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மேட்டூர் அணையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி கடந்த 3 நாட்களாக அதே நிலையில் இருக்கிறது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தால், உரிய வழிகளில் வெளியேற்றப்படும். மேட்டூர் அணை உபரிநீர் திட்டம் ரூ.565 கோடி மதிப்பில் கடந்த ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.
ஆனால், இத்திட்டம் இன்னும் முழுமையடையாத காரணத்தால் தற்போது 5 ஏரிகளுக்கு மட்டுமே தண்ணீர் செல்கிறது. மேலும், இத்திட்டத்திற்கு இன்னும் நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இந்த பணிகளை துரிதப்படுத்தி விரைவில் உபரிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்.
வலுப்படுத்த முயற்சி
முல்லைப்பெரியாறு அணையை பலப்படுத்த கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தியும் முடிவுகள் எட்டப்படவில்லை. எனவே, அணையின் நீர்மட்டத்தை ஒவ்வொரு அடி உயர்த்துவதற்கும் சுப்ரீம் கோர்ட்டை அணுகி தான் உயர்த்தியுள்ளோம்.
தி.மு.க. எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது தான் முல்லைப் பெரியாறு அணை குறித்த விவரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் எம்.ஜி.ஆர். காலத்திலேயே உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டு விட்டது. முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்த தி.மு.க.தான் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.
அனுமதிக்க மாட்டோம்
கேரளாவில் புதிய அணை கட்டுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே நிலைப்பாடு தான். அதே போல கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட மத்திய நீர்வள ஆணையத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்து வழங்க வேண்டும்.
அந்த திட்ட அறிக்கைக்கு அணையின் கீழ் பகுதியில் உள்ளவர்களான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே அணை கட்ட முடியும். எனவே கர்நாடகா, கேரளாவில் தமிழகத்தின் நீர் ஆதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு புதிய அணையையும் கட்ட அனுமதிக்க மாட்டோம்.
தூர்வாரவில்லை
நாங்கள் ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் சரியான முறையில் ஏரி, குளங்களை தூர்வாரவில்லை. ஒரு சில இடங்களில் ஏரியின் கரைகளை வெட்டி மண்ணை எடுத்துச் சென்றுள்ளார்கள். பல குளங்கள், ஏரிகளில் மதகுகள் சீர்குலைந்துள்ளது ஆனாலும் ஏரி, குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஏரி, குளங்களை தூர்வாரவில்லை என்று கூறுகிறார். நாங்களும் அதையே தான் சொல்கிறோம். அவர்கள் தூர்வாரவில்லை. கோதாவரி -காவிரி இணைப்பு திட்டம் பேச்சுவார்த்தையில் உள்ளது. பேச்சுவார்த்தை முடிந்தவுடன் இந்த திட்டத்துக்கு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
பேட்டியின்போது எம்.பி.க்கள் செந்தில்குமார், எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், வக்கீல் ராஜேந்திரன், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story