சூளகிரி பகுதியில் திருட்டு போன 41 இருசக்கர வாகனங்கள் மீட்பு 5 பேர் கைது
சூளகிரி பகுதியில் திருட்டு போன 41 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூளகிரி:
சூளகிரி பகுதியில் திருட்டு போன 41 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இருசக்கர வாகனங்கள் திருட்டு
சூளகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போனது. இதில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில், ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி தனிப்படை போலீசார், சூளகிரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பர்கூர் அருகே குண்டியால் நத்தம் கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது26), திருப்பத்தூர் மாவட்டம் சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த அரசன் (24), சந்தோஷ் (19) மற்றும் திருவேங்கடம் (31), வேலூர் மாவட்டம் பனந்தோப்பை சேர்ந்த சதீஷ்குமார் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
5 பேர் கைது
இவர்கள் ஓசூர், சூளகிரி, குருபரப்பள்ளி, பர்கூர் உள்ளிட்ட பல இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி வேறு மாவட்டங்களில் விற்று வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான 41 இருசக்கர வாகனங்களை போலீசார் மீட்டனர். இதையடுத்து தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி பார்வையிட்டார். தொடர்ந்து அவர் தனிப்படை போலீசாரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளிலும், மெயின் ரோடுகளிலும் பாதுகாப்பற்ற இடங்களில் நிறுத்தக்கூடாது.
மேலும் இரு சக்கர வாகனங்களை வாங்கும்போது, ஆவணங்கள் சரியாகஉள்ளதா? என்று சரிபார்த்து வாங்கவேண்டும். திருட்டு வாகனங்களை பணம் கொடுத்து வாங்கி ஏமாறக்கூடாது. குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story