2 கும்கி யானைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு
காட்டுயானைகளை விரட்ட வந்த 2 கும்கி யானைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவை சிகிச்சைக்காக மீண்டும் முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கூடலூர்
காட்டுயானைகளை விரட்ட வந்த 2 கும்கி யானைகளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவை சிகிச்சைக்காக மீண்டும் முதுமலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்த காட்டுயானைகளை விரட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதுமலையில் இருந்து விஜய், சுஜய் ஆகிய கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டு பாடந்தொரை, செளுக்காடி உள்பட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் காட்டுயானைகள் ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டது.
காய்ச்சல்
இந்த நிலையில் காட்டுயானைகளை விரட்ட வந்த 2 கும்கி யானைகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
இதனால் அங்கிருந்து மீண்டும் கும்கி யானைகளை வனத்துறையினர் லாரிகளில் முதுமலைக்கு நேற்று கொண்டு சென்றனர். இதில் விஜய் யானைக்கு இடது காலில் வீக்கம் ஏற்பட்டு உள்ளது. சுஜய் யானைக்கு காய்ச்சல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் முதுமலை முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
வேறு கும்கிகள்
இதுகுறித்து வனத்துறை தரப்பில் கூறும்போது, 2 கும்கி யானைகளுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் முதுமலைக்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்கு பதிலாக வேறு கும்கி யானைகள் உடனடியாக அழைத்து வரப்பட்டு காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றனர். கும்கி யானைகளின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் காட்டுயானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story