பொம்மதேவர் கோவிலை தரைமட்டமாக்கிய காட்டுயானைகள்


பொம்மதேவர் கோவிலை தரைமட்டமாக்கிய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 17 Nov 2021 7:10 PM IST (Updated: 17 Nov 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொம்மதேவர் கோவிலை காட்டுயானைகள் தரைமட்டமாக்கின. இதனால் ஆதிவாசி மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

கூடலூர்

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொம்மதேவர் கோவிலை காட்டுயானைகள் தரைமட்டமாக்கின. இதனால் ஆதிவாசி மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

ஆதிவாசி மக்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட முதுமலை ஊராட்சியானது புலிகள் காப்பக வனத்தில் உள்ளது. இந்த ஊராட்சியில் முதுகுளி, நம்பிக்குன்னு, நாகம்பள்ளி, மண்டக்கரா, கோழிமலை, கல்லஞ்சேரி உள்பட பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. இங்கு ஆதிவாசி மற்றும் மவுண்டாடன் செட்டி சமூக மக்கள் வாழ்ந்து வந்தனர். 

மேலும் அவர்களின் குலதெய்வ கோவில்களும் உள்ளன. ஆண்டுதோறும் அந்த கோவில்களில் வனத்துறையினரும் இணைந்து திருவிழா நடத்துவது வழக்கம் ஆகும். ஆனால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

மாற்றிடம் வழங்கும் திட்டம்

இதற்கிடையில் கடந்த 2007-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி முதுமலை ஊராட்சியில் மாற்றிட வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் கீழ் தகுதியான குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, 3 கட்டங்களாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும்பாலான குடும்பங்கள் முதுமலை ஊராட்சியை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டனர். 

இந்த நிலையில் அவர்களின் குலதெய்வ கோவிலான சுமார் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொம்மதேவர் கோவில், மண்டக்கரா வனப்பகுதியில் உள்ளது. இங்கு 60 குடும்பத்தினர் வசித்து வந்தனர். தற்போது மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவரும் வெளியேற்றப்பட்டுவிட்டனர். 

கோவில் தரைமட்டம்

தற்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் மண்டக்கரா பகுதியில் அதிகளவில் முகாமிட்டு உள்ளன. மேலும் பொம்மதேவர் கோவிலை காட்டுயானைகள் உடைத்து தரைமட்டமாக்கிவிட்டன. பல தலைமுறைகளாக வழிபட்டு வந்த குலதெய்வ கோவிலை காட்டுயானைகள் உடைத்து இருப்பதை கண்டு ஆதிவாசி மக்கள் கவலை அடைந்தனர். இதுகுறித்து ஆதிவாசி மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் கூறியதாவது:-

நடவடிக்கை

ஆண்டுதோறும் பொம்மதேவர் கோவில் விழாவில் போலீஸ், வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்வது வழக்கம். மேலும் கும்கி யானைகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். சுமார் 15 நாட்கள் நடக்கும் விழாவால் முதுமலை வனமே விழாக்கோலம் பூண்டிருக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த பொம்ம தேவர் கோவிலை காட்டுயானைகள் தரைமட்டமாகி விட்டது. எனவே கோவிலை புதுப்பித்து வழிபாடு செய்யும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story