வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி


வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி
x
தினத்தந்தி 17 Nov 2021 7:10 PM IST (Updated: 17 Nov 2021 7:10 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நீலகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஊட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நீலகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்க்கும் பணி நடந்தது. இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.

எந்திரங்கள் சரிபார்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. கேத்தி, கீழ்குந்தா, அதிகரட்டி, ஜெகதளா, கோத்தகிரி, சோலூர், நடுவட்டம், ஓவேலி உள்பட 11 பேரூராட்சிகளில் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, ஊட்டியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி முதல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு தன்மையை உறுதிப்படுத்த 8 என்ஜினீயர்கள் அடங்கிய குழு சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பாரத் எலெக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து என்ஜினீயர் சல்மா தலைமையில் 8 பேர் வந்து உள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

ஊட்டியில் உள்ள கேரளா கிளப்பில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்ட எந்திரங்களை முதற்கட்ட ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு பணியை நேற்று கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். எந்திரங்கள் சரியாக செயல்படுகிறதா, பேட்டரி, வாக்குப்பதிவை சரிபார்க்கும் சீட்டு, திரை சரியாக இயங்குகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் பொறுப்பு கீர்த்தி பிரியதர்ஷினி கூறியதாவது:-
நீலகிரியில் 600 வாக்குபதிவுக்கான கட்டுப்பாட்டு கருவிகள், 1,200 வாக்குப்பதிவு எந்திரங்களை என்ஜினீயர்கள் குழு சரிபார்த்து வருகிறது. முதற்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எந்திரங்களில் 309 கட்டுப்பாட்டு கருவிகள், 485 வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. இதில் 10 கட்டுப்பாட்டு கருவிகள், 11 வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து இருப்பது கண்டறியப்பட்டு, தனியாக வைக்கப்பட்டது.

மாதிரி தேர்தல்

எந்திரங்கள் சரிபார்க்கும் பணியை துரிதமாக முடித்து வருகிற 22-ந் தேதிக்குள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி தேர்தல் நடத்த பாரத் எலக்ட்ரானிக் நிறுவன பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 11 பேரூராட்சிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பயன்படுத்தும் 4,750 காகிதங்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சீனிவாசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story