வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம்: 1,107 பேருக்கு ரூ.139 கோடி கடனுதவி கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் வழங்கினார்
கள்ளக்குறிச்சியில் நடந்த வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு 1,107 பேருக்கு ரூ.139 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கினார்.
கள்ளக்குறிச்சி,
வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்ட (இந்தியன் வங்கி) முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சார்பில் மாபெரும் வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியன் வங்கி துணைபொது மேலாளர் மணிசுப்பிரமணியன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் பாமா புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் விஜயலட்சுமி வரவேற்றார். இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி, குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்ததுடன், மண்டபத்தில் இந்தியன் வங்கி உள்பட 23 வங்கி கிளைகள் சார்பில் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர் சேவை கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு பேசினார்.
கடனுதவி
அதைத்தொடர்ந்து அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர்களில் 1,107 பேருக்கு ரூ.139 கோடி மதிப்பில் பல்வேறு விதமான கடனுதவிகளை கலெக்டா் ஸ்ரீதர் வழங்கினார். முன்னதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொதுமேலாளர் துவாராகநாத், பாரத ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளர் சீதாராமன், கனரா வங்கி உதவி பொது மேலாளர் மாதவி, கரூர் வைசியா வங்கி உதவி பொதுமேலாளர் முத்துக்குமார், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி முதன்மை மேலாளர் பிரதீப்குமார், ஆக்சிஸ் வங்கி துணைத் தலைவர் சீனிவாசன், டி.ஜி.பி. பொது மேலாளர் ரத்தனராஜன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பொதுமேலாளர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story