பழனி முருகன் கோவிலுக்கு மெகா சைஸ் காலணி காணிக்கை
பழனி முருகன் கோவிலுக்கு மெகா சைஸ் காலணியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.
பழனி:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினசரி வருகை தருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பழனி முருகன் கோவிலுக்கு வரத்தொடங்கியுள்ளனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதற்கிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் விதவிதமான நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அப்போது பல்வேறு பொருட்களை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். அந்த வகையில், கரூரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர். அப்போது அவர்கள் ‘மெகா சைஸ்’ காலணியை தலைச்சுமையாக எடுத்து கிரிவீதியில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள், தாங்கள் கொண்டு வந்த ‘மெகா சைஸ் காலணி’யை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
இதுகுறித்து கரூர் பக்தர்கள் கூறுகையில், நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் பழனி முருகனுக்கு சீர்வரிசை பொருட்களை கொண்டுவருவோம். இந்த முறை சீர்வரிசை பொருட்களுடன், மெகா சைஸ் காலணியையும் கொண்டு வந்து காணிக்கையாக செலுத்த முடிவு செய்தோம். அதன்படி, பொதுவான காலணிகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை கொண்டு பிரத்யேகமாக காலணியை தயார் செய்து தற்போது காணிக்கையாக செலுத்தியுள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story