போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் வந்த அருணாசலேஸ்வரர் கோவில்
தீபத்திருவிழாவையொட்டி போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் அருணாசலேஸ்வரர் கோவில் வந்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நாளை (வெள்ளிக்கிழமை) அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நாட்களில் மாட வீதியில் நடைபெறும் சாமி வீதி உலா மற்றும் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
விழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகின்றது. மேலும் கோவிலில் அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று மதியத்தில் இருந்து பவுர்ணமி தொடங்க உள்ளதாலும், நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ளதாலும் நேற்று மதியம் 1 மணியில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டது. இதனால் கோவில் வளாகம் மதியத்திற்கு மேல் பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் 20-ந்தேதி (சனிக்கிழமை) வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும், கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
தீபத்திருவிழா பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வர தொடங்கினர். இதில், வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதனால் பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக நேற்றில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவில் முழுவதும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றி மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிரிவலப்பாதையில் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story