பெரம்பலூர் மாவட்டத்தில் 40 ஏரிகள் நிரம்பின


பெரம்பலூர் மாவட்டத்தில் 40 ஏரிகள் நிரம்பின
x
தினத்தந்தி 17 Nov 2021 11:59 PM IST (Updated: 17 Nov 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையின் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 40 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூர், 
மேலும் 8 ஏரிகள் நிரம்பின
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள விசுவக்குடி, கொட்டரை ஆகிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி உபரிநீர் வெளியே செல்கிறது. மருதையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
மேலும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், 32 ஏரிகள் நிரம்பிய நிலையில், தற்போது மேலும் வெங்கலம் பெரிய ஏரி, அரணாரை பெரிய ஏரி, செஞ்சேரி ஏரி, தேனூர் ஏரி, பெரம்பலூர் பெரிய ஏரி, பெரம்பலூர் சிறிய ஏரி, சிறுவாச்சூர் ஏரி, கண்ணப்பாடி ஏரி ஆகிய 8 ஏரிகள் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையினால் நிரம்பி, உபரிநீர் மறுகாலில் பாய்ந்து செல்கிறது.
விவசாய பணிகள் மும்முரம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 40 ஏரிகள் நிரம்பியதால் விவசாயிகள் நேற்று காலை ஏரிகளில் சிறப்பு வழிபாடு நடத்தி, தண்ணீரை பூக்கள் தூவி மரியாதை செலுத்தி வரவேற்றனர். பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டும், சிலர் உற்சாக குளியலிட்டும் செல்கின்றனர். மேலும் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளும், குளங்களும் நிரம்பி வருவதால் விவசாயிகள் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
வயல்களில் விவசாய கூலித்தொழிலாளர்கள் குலவையிட்டு பாட்டு பாடி நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். நிரம்பிய ஏரிகளின் கரையோரத்தில் உள்ள வயல்களிலும், உபரி நீர் செல்லும் ஓடைகளின் ஓரத்தில் உள்ள வயல்களிலும் தண்ணீர் புகுந்ததால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
செட்டிகுளத்தில் அதிக மழை
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இதேபோல் நேற்று மாலை நேரத்தில் விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- செட்டிகுளம்-64, பாடாலூர்-24, புதுவேட்டக்குடி-2, பெரம்பலூர்-12, கிருஷ்ணாபுரம்-32, தழுதாழை-14, வேப்பந்தட்டை-42.

Next Story