கூட்டுறவு துறையில் தவறு செய்பவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்


கூட்டுறவு துறையில் தவறு செய்பவர்கள் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள்
x
தினத்தந்தி 18 Nov 2021 1:08 AM IST (Updated: 18 Nov 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு துறையில் தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வேலூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

கூட்டுறவு துறையில் தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வேலூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

கூட்டுறவு வாரவிழா

ஒருங்கிணைந்த வேலூர் மண்டலத்தின் 68-வது கூட்டுறவு வாரவிழா காட்பாடியில் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பத்துரை வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது:- 

கூட்டுறவுத்துறை கடந்த ஆட்சியில் சிறப்பாக இயங்கவில்லை. ஆனால் தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறையில் கைதேர்ந்தவர். அதனால் அவர் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த பல்வேறு முறைகேடுகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். 

தற்போது கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது. மகளிர் குழுவினரும் சிறப்பாக செயல்படுகின்றனர்.

ரூ.617 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க்கடன் பெற்ற 86,443 விவசாயிகளின் ரூ.617 கோடியே 3 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

கூட்டுறவு நிறுவனங்களில் பெறப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அதன்படி 3 மாவட்டங்களில் 2,00,476 பேரின் ரூ.760 கோடி நகைக்கடன், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட 74,697 உறுப்பினர்களின் ரூ.120 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் 94 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. 1,050 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகி உள்ளது. நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 67 ஏரிகள் நிரம்பி விட்டன. 

நிரம்பாத ஏரிகள் பட்டியல் எடுக்கப்பட்டு புனரமைக்கப்படும். ஊராட்சி பகுதியில் உள்ள ஏரிகள் தூர்வாரப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும்.

தவறு செய்தால் ஜெயில்

கூட்டுறவு துறையில் பணிபுரிபவர்கள் நேர்மையாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டும். கூட்டுறவு துறையில் தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் ஜெயிலுக்கு அனுப்பப்படுவார்கள். 

அவர்கள் அங்கு ஒன்று சேர்ந்து தாங்கள் செய்த குற்றம், அதில் எப்படி மாட்டினோம் என்று ஆராய்ச்சி செய்வார்கள். அதனால் ஜெயில் என்பது ஆராய்ச்சி சாலையாக மாறிவிடுகிறது. 

கடந்த ஆட்சியில் போலி நகைகள் மற்றும் போலி ஆவணங்கள் வைத்து கூட்டுறவு வங்கிகளில் பலர் கடன் பெற்றுள்ளனர். அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள். அதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அரசின் சிறப்பான செயல்பாடுகள்

விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், கூட்டுறவுத்துறையில் பயிர், நகைக்கடன்களில் பல முறைகேடு நடந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின்னர் அவை கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்பட பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழக அரசின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. 

அதனால்தான் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 95 சதவீத வெற்றி தி.மு.க.விற்கு கிடைத்துள்ளது. தற்போது தலைமை சரியாக இருப்பதால் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட தொடங்கி விட்டனர் என்றார்.

விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகியோர் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 1,151 பயனாளிகளுக்கு ரு.10 கோடியே ஒரு லட்சம் கடனுதவிகள் வழங்கினர். பின்னர் சிறப்பாக செயல்பட்ட சங்கங்கள், சங்க உறுப்பினர்களுக்கு நினைவுபரிசு வழங்கப்பட்டன.

இதில், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன், வேலூர் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு,  உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, ஆவின் பொதுமேலாளர் ரவிக்குமார், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story