நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை


நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை
x
தினத்தந்தி 18 Nov 2021 1:35 AM IST (Updated: 18 Nov 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது.

நெல்லை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. ஆறு, குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இருகரைகளையும் தொட்டப்படியும், குறுக்குத்துறை முருகன் கோவிலை சூழ்ந்தபடியும் தண்ணீர் சென்றது. கடந்த 3 நாட்களாக மழை குறைந்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளமும் குறைந்து காணப்பட்டது.

வெளுத்து வாங்கியது

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் மழை இல்லை. நெல்லை மாநகர பகுதியில் காலையில் இருந்து மாலை 3.30 மணி வரை வெயில் அடித்தது. 3.45 மணிக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர பகுதிகளான நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்தது. சாலைகள் முழுவதும் சேறும், சகதியுமாக மோசமான நிலையில் காணப்பட்டது. நெல்லை தற்காலிக புதிய பஸ்நிலையத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கி காணப்பட்டது. இதனால் பஸ்களில் ஏறுவதற்கு பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

மாணவ-மாணவிகள் தவிப்பு

நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்களில் செல்ல பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளிக்கூடம், கல்லூரி முடிந்து வீடு திரும்ப முடியாமல் மாணவ-மாணவிகள் தவித்தனர்.

குறிப்பாக நெல்லை வண்ணார்பேட்டை பஸ் நிறுத்தம் பகுதி அருகில் ஏராளமான மாணவ-மாணவிகள் மழைக்கு ஒதுங்கி நின்றனர். மழை நின்ற பின்னர் அவர்கள் தங்களது ஊருக்கு செல்லும் பஸ்களில் முண்டியடித்து ஏறிச் சென்றனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

வள்ளியூர்-பணகுடி

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், ராதாபுரம், பணகுடி, வடக்கன்குளம், நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4.45 மணி அளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வாகன ஓட்டிகள் முன்புற விளக்குகளை எரிய விட்டு வாகனங்களில் சென்றனர். இந்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

சங்கரன்கோவில்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், குருக்கள்பட்டி, தளவாய்புரம், பொய்கை, வடக்குப்புதூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் மழைநீர் ஆறாக ஓடியது. மேலும் சில வீட்டு காம்பவுண்டுகளில் மழைநீர் புகுந்தது. 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

Next Story