நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி


நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி
x
தினத்தந்தி 18 Nov 2021 2:15 AM IST (Updated: 18 Nov 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகின்றன. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை மாநகராட்சி, அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகள் அடங்கிய உள்ளாட்சி பகுதிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கும், 2 நகராட்சிகளிலும் 42 வார்டுகளுக்கும், 17 பேரூராட்சிகளிலும் 273 வார்டுகளுக்கும் என மொத்தம் 370 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் நெல்லை மாநகராட்சிக்கு 490 வாக்குச்சாவடிகளும், 2 நகராட்சிகளுக்கு 93 வாக்குச்சாவடிகளும், 17 பேரூராட்சிகளுக்கு 319 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 902 வாக்குச்சாவடிகள் இந்த தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை வாக்கு பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.  இதற்காக நெல்லை மாநகராட்சிக்கு 2 ஆயிரத்து 700 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கு 2 ஆயிரத்து 700 வாக்குப்பதிவு எந்திரங்களும் என மொத்தம் 5 ஆயிரத்து 400 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டு நெல்லை மாநகராட்சியிலும், சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னோடியாக நெல்லை மாநகராட்சியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சரிபார்க்கும் பணி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த பணி உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் முன்னிலையில் நடந்தது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இந்த எந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி முடிந்த பின்னர் நகராட்சி, பேரூராட்சிகளுக்காக சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story