ஆந்திராவில் இருந்து நெல்லைக்கு 1,330 டன் உரம் ரெயிலில் வந்தது
நெல்லை மாவட்டத்தில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு 1,330 டன் உரம் ரெயில் மூலம் நெல்லைக்கு வந்தது.
நெல்லை,:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து அணைகளில் இருந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கால்வாய்களிலும், தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 700-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நெல் நாற்று பாவும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள், வயலில் டிராக்டர் மூலம் உழுது பதப்படுத்தி வருகிறார்கள்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளதால் குளத்து பாசனம், கால்வாய்பாசனம், ஆற்றுப்பாசனம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலங்களில் நெல் நடவு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மேலும் கிணற்றுப் பாசன பகுதியிலும் நெல் நாற்று நடுவதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மானாவாரி பகுதிகளில் பயறு உள்ளிட்ட சிறுதானியங்களும் பயிரிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உரங்கள், விதைகள் தட்டுப்பாடில்லாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நெல் சாகுபடிக்கு தேவையான 1,330 டன் காம்ப்ளக்ஸ் உரம் ஆந்திர மாநிலம் அதானி போர்ட்டியில் இருந்து நெல்லைக்கு நேற்று முன்தினம் ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டது. 21 பெட்டிகளில் வந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் இறக்கி லாரிகளில் ஏற்றினார்கள்.
இந்த உரங்கள் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கிருந்து விவசாயிகளுக்கு உரங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
Related Tags :
Next Story