பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
கூடலூரில் 8 பேர் பணி நீக்கத்தை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்
கூடலூரில் 8 பேர் பணி நீக்கத்தை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திடீர் பணி நீக்கம்
பி.எஸ்.என்.எல். பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிரந்தர ஊழியர்கள் பெரும்பாலனவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் பி.எஸ்.என்.எல். அலைவரிசை சேவை வழங்கப்பட்டு வந்தது. இவர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 63 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் கீழ் பணியாற்றி வந்த 8 ஒப்பந்த தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட நிர்வாகம் கடந்த 16-ந் தேதி திடீரென பணி நீக்கம் செய்தது. மேலும் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளம் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட எந்த பண பலன்களும் வழங்கவில்லை.
வேலை நிறுத்தம்
இதை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். பணியாளர்கள், தொழிலாளர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் கூடலூர் பி.எஸ்.என்.எல் .அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் யூனியன் தலைவர் சுந்தரராஜ் தலைமையில் செயலாளர் அருள், தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் சிவக்குமார், தலைவர் ரவி, நிர்வாகி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பி.எஸ்.என்.எல். பணியாளர்கள், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அலைவரிசை மற்றும் இணையதள சேவை முடங்கியது. இதன் காரணமாக வங்கி பண பரிவர்த்தனைகளும் சரிவர நடைபெறவில்லை.
Related Tags :
Next Story