தூத்துக்குடியில் இருந்து பழனிக்கு சரக்கு ரெயிலில் வந்த 1,267 டன் உரம்
தூத்துக்குடியில் இருந்து பழனிக்கு சரக்கு ரெயிலில் 1,267 டன் உரம் வந்தது.
பழனி:
பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு சாகுபடி நடைபெறுகிறது. இதேபோல் தொப்பம்பட்டி வட்டார பகுதியில் மானாவாரியாக மக்காச்சோளம், பருத்தி, உளுந்து சாகுபடி நடந்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதையடுத்து, பழனி பகுதியில் பயிர் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
இந்தநிலையில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்களை இருப்பு வைக்க வேளாண் துறை முடிவு செய்துள்ளது. இதனையடுத்து தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் பழனிக்கு 1,267 டன் யூரியா உரம் நேற்று கொண்டு வரப்பட்டது. இதில் 800 டன் யூரியா பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கம், உரக்கடைகளுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம் பகுதிக்கு 467 டன் யூரியா லாரிகளில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story