உபரிநீர் வெளியேற்றம்


உபரிநீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 18 Nov 2021 10:12 PM IST (Updated: 18 Nov 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

அமராவதி வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தளி, நவ.19-
அமராவதி வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து அமராவதி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. பஞ்சலிங்க அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 
அமராவதி  அணை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. 
தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மூலம் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. அதை ஆதாரமாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக்கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததையொட்டி வனப்பகுதியில் உள்ள காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்ததுடன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
தண்ணீர் திறப்பு 
இதையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 7ஆயிரம் கனஅடி நீர்வரத்து ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 9 கண்மதகுகளில் மூன்று மதகுகள், பிரதான கால்வாய், ஷட்டர்கள் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 
அணைக்கு வந்து கொண்டு இருந்த நீர்வரத்து காலை 8 மணி அளவில் படிப்படியாக குறைந்தது. ஆனாலும் 3 மதகுகள் வழியாக தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் வானம் இருள் சூழ்ந்து மேகமூட்டமாக காணப்படுவதால் கனமழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. 
இதை தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தை உதவிப் பொறியாளர் பாபுசபரீஸ்வரன் தலைமையிலான பொதுப் பணித்துறையினர் இரவு பகலாக தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் 9 கண் மதகுகள், ஷட்டர்கள், பிரதான கால்வாய் வழியாக கூடுதலாக தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கைகளும் அதிகாரிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காட்டாற்று வெள்ளம்
மேலும் பலத்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பஞ்சலிங்க அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து நேற்று காலை கோவில் வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பலத்த மழை பெய்வதற்கான சூழல் நிலவுவதால் அருவிக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள்.

Next Story