பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பூரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததுடன், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. திருப்பூர் ஜி.என்.பாலன்நகர் மற்றும் வைஷ்ணவிநகரில் தொடர்ந்து பெய்த மழையால் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. நேற்று காலை வரை மழைநீர் நேற்று காலை வரை வடியாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொம்மநாயக்கன்பாளையம் நெருப்பெரிச்சல் சாலையில் திடீர் சாலைமறிலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கிணற்றின் சுவர்இடிந்து விழுந்தது
இதையடுத்து அங்கிருந்து மழைநீர் வேகமாக செல்லும் வகையில் அங்குள்ள ஓடை மதகின் ஒருபகுதி உடைக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே ஜி.என்.பாலன்நகர் பகுதியில் இருந்து வெளியேறும் மழைநீரால் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள ஒட்டக்குளம் நிரம்பி உள்ள நிலையில், தற்போது கூடுதல் மழைநீரை திறந்து விடுவதால் ஒட்டக்குளத்தில் இருந்து மழைநீர் உப்பிலிபாளையத்தில் உள்ள வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதேபோல் போயம்பாளையத்தை அடுத்த மும்மூர்த்திநகர், கருப்பாராயன்நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் விடிய, விடிய தூங்காமல் அமர்ந்திருந்தனர். போயம்பாளையத்தில் இருந்து அவினாசிநகர் செல்லும் சாலையில் உள்ள தனியார் கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்தது. இதனால் கிணற்றையொட்டி இருந்த சாலையின் ஒருபகுதியும் இடிந்து கிணற்றுக்குள் சாய்ந்தது.
உயிர் தப்பினார்
இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் அங்கு உடனடியாக சென்று போக்குவரத்தை வேறு பாதையில் மாற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பின்னர் கிணற்றை சுற்றி தற்காலிக வேலி அமைத்தனர். இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போயம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. இதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் பள்ளி வளாகத்தில் மண் கொட்டப்பட்டு சீரமைக்கப்பட்டது. திருப்பூர் சிறுபூலுவப்பட்டி ஏ.டி.காலனியில் மூர்த்தி என்பவரின் வீடு நேற்று முன்தினம் நள்ளிரவு இடிந்து விழுந்தது. அப்போது மூர்த்தி வெளியில் இருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து நேற்று வருவாய்துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை நடத்தியதுடன் மூர்த்திக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அங்கேரிபாளையத்தை அடுத்த மகாவிஷ்ணுநகரில் மழைநீரும், கழிவுநீரும் வீதிகளில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஒருசிலர் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போயம்பாளையத்தை அடுத்த கங்காநகர் பகுதியில் தொடர்மழை காரணமாக சாலையின் ஒருபகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
Related Tags :
Next Story