திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை
திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்தது. இதனால் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
மீண்டும் கனமழை
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின. கடந்த சில நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை சற்று ஓய்ந்து இருந்தது. இந்தநிலையில் நேற்று காலை பெய்ய தொடங்கிய மழை மதியம் வரை நீடித்தது. அவ்வப்்போது விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், தாழ்வாக பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த மழையினால் சம்பா, தாளடி வயல்களில் தேங்கிய தண்ணீர் வடிவதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். எனவே சம்பா, தாளடி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினால் தான் இதுவரை சாகுபடிக்கு செய்த செலவினை ஈடு கட்ட முடியும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கன மழையினால் மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வலங்கைமான்-94, நீடாமங்கலம்-94, குடவாசல்-65, திருவாரூர்-64, திருத்துறைப்பூண்டி-60, மன்னார்குடி-58, முத்துப்பேட்டை-50, பாண்டவையாறு தலைப்பு-43.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் பகுதிகளில் பெய்த கனமழையால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் சம்பா நடவு பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இந்தநிலையில் சில நாட்கள் மழை ஓய்ந்தது. இதனால் வயல்களில் மூழ்கிய பயிர்களை காப்பாற்ற தேங்கிய மழை தண்ணீரை அப்பகுதி விவசாயிகள் வெளியேற்றினர். மீண்டும் மறுஉழவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கூத்தாநல்லூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு பகலாக மழை பெய்து வருகிறது. இதனால் அன்னமரசனார், வடபாதி ஆகிய பகுதிகளில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் மழை தண்ணீர் அதிகளவில் செல்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் மழைநீர் தேங்கி மீண்டும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று அப்பகுதி விவசாயிகள் ெதரிவித்தனர்.
Related Tags :
Next Story