வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஒகேனக்கல்
வெள்ளக்காடாக காட்சியளிக்கும் ஒகேனக்கல்
பென்னாகரம், நவ.19-
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக இருந்தது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, பிலிகுண்டுலு, தேன்கனிக்கோட்டை, மாற்றபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மீண்டும் கனமழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கினால் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தீவிர கண்காணிப்பு
இதன் காரணமாக பரிசல்கள் காவிரி கரையோர பகுதிகளில் கவிழ்த்து போடப்பட்டுள்ளன. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முதலைப்பண்ணை, மணல்திட்டு, ஆலம்பாடி, நாடார் கொட்டாய், ஊட்டமலை மற்றும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர்
ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று இரவு 9.30 மணி அளவில் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 55 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.10 அடியாகவே நீடித்தது.
Related Tags :
Next Story