பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் சண்முகா நதி அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, சின்ன ஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அப்பிபட்டி வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குளங்களில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த குளங்களால் அந்தப் பகுதியில் 1,640 ஏக்கர் புன்செய் நிலங்கள் மறைமுக பாசன வசதி பெறுகின்றன. சண்முகா நதி அணையின் மொத்த உயரம் 52.50 அடி. கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் பெய்த மழைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழுகொள்ளளவை எட்டியது. இதனால் அணை நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது.
இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று சண்முகா நதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார். கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பின்னர் கால்வாயில் சீறிப்பாய்ந்து வரும் தண்ணீரில் அவர்கள் மலர் தூவினர். நிகழ்ச்சியில், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, தாசில்தார் அர்ஜுனன், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை, உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர் முருகேசன், ராயப்பன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கலெக்டர் கூறுகையில், அணையில் இருந்து வினாடிக்கு 14.47 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 100 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போது வினாடிக்கு 16 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story