கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா


கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா
x
தினத்தந்தி 18 Nov 2021 11:31 PM IST (Updated: 18 Nov 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலையில் கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை

தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலையில் கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

9-ம் நாள் விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது. 

இந்த நிலையில் நேற்று கோவிலில் 9-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.

3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து மேளதாளங்களுடன் வந்து 5-ம் பிரகாரத்தில் தயார் நிலையில் இருந்த வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு தீபாராதனை நடந்தது.

முன்னதாக திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் சாமி உற்சவ உலா கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது. 

நேற்று முன்தினம் மதியம் முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் சாமி உலா பக்தர்களின்றி நடைபெற்றது. 

மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடந்தது. இரவு 9 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தை சுற்றி உலா வந்தனர்.

 மகா தீபம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை முன்பு வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. 

பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபத்தையொட்டி நேற்று கோவிலில் கொடிமரம், தீப தரிசன மண்டபம், பலி பீடம், சாமி சன்னதி, அம்மன் சன்னதி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெங்களூருவை சேர்ந்த ஆதித்யாராம் பவுண்டேசன் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான ரோஜா பூக்கள், அந்தூரியம் பூக்கள், அர்சிட், கார்னேசன், ஜிப்சோபிலா உள்ளிட்ட வண்ண மலர்களாலும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாமரை பூக்கள் மற்றும் சோளம் போன்றவற்றினாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 

பக்தர்களுக்கு அனுமதி ரத்து

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினால் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் முதல் திருவண்ணாமலை நகரில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனால் கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதி மற்றும் திருவண்ணாமலை நகர பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மலையேற தடை

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது. 

மலைக்கு பக்தர்கள் செல்வதை கண்காணிக்க சிறப்பு கமாண்டோ படையினர் 120 பேர் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 

வெளி மாநில மற்றும் மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்கள் வருவதை கண்காணிக்க மாவட்ட எல்லைகள், முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

11 தற்காலிக பஸ் நிலையங்கள்

நேற்று பகலில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்ட, மாநில எண் கொண்ட வாகனங்கள் வந்தால் அவற்றை திருவண்ணாமலை நகருக்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். 

நேற்று முதல் திருவண்ணாமலையை சுற்றி 11 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.

Next Story