திண்டிவனத்தில் கனமழை அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கியது
திண்டிவனத்தில் நேற்று பெய்த கனமழையின் போது ரெயில்வே மேம்பாலத்தின் கீழே ஓடிய வெள்ளத்தில் அரசு பஸ் சிக்கிக் கொண்டது பின்னர் அந்த அரசு பஸ் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது
திண்டிவனம்
பலத்த மழை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. சில நிமிட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நேற்று காலை முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து கனமழையாக கொட்டித் தீர்த்தது.
இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இதனால் ஓடை, வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
அரசு பஸ்
தொடர்ந்து பெய்த மழையால் ஏற்கனவே நிரம்பி இருந்த கிடங்கல்-1 ஏரியில் இருந்து உபரி நீர் வழிந்து அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழ் உள்ள சாலை வழியாக பாய்ந்தோடியது. நேரம் செல்ல செல்ல தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சாலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி நோக்கி வந்த அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது.
அந்த பஸ்சை திருத்தணி பகுதியைச் சேர்ந்த மது(வயது 43) என்பவர் ஓட்டி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த மணி(45) கண்டக்டராக பணியில் இருந்தார். 6 பயணிகள் உள்ளே இருந்தனர். என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் பஸ்சை தொடர்ந்து இயக்க முடியவில்லை. இதனால் 6 பயணிகளுடன், டிரைவர், கண்டக்டரும் பஸ்சில் இருந்து கீழே இறங்க முடியாமல் தவித்தனர்.
பொக்லைன் எந்திரம்
இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு கயிறு கட்டி சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது. இதன் பின்னர் பஸ்சில் தவித்த டிரைவர், கண்டக்டர் மற்றும் 6 பயணிகளும் மீட்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரசு பஸ் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story