பேரணாம்பட்டு, குடியாத்தத்தில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் சாலை மறியல்


பேரணாம்பட்டு, குடியாத்தத்தில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Nov 2021 11:41 PM IST (Updated: 18 Nov 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு, குடியாத்தத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு, குடியாத்தத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பேரணாம்பட்டு பகுதியில் நேற்று காலை முதல் மாலை வரை கன மழை பெய்தது. இதனால் பேரணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட தரைக்காடு, குப்பைமேடு, எல்.ஆர் நகர் உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் மழையினால் அதிக அளவு காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

பேரணாம்பட்டு நகர் வழியாக செல்லும் விழுப்புரம் - மங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் கால்வாய் சரியான முறையில் அமைக்கப்படாததால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் மெக்கா நகர் பகுதியில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

சாலை மறியல்

 இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வீ.கோட்டா சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் வடிவேல், நகராட்சி ஆணையாளர் சசிகலா, முன்னாள் நகராட்சி தலைவர் ஆலியார் ஜூபேர் அஹமது உள்ளிட்டோர் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்தனர்.

ஆனால் பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மழை நீர் செல்ல வடிகால் கால்வாய் அமைத்து நிரந்தர தீர்வு காணவேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் கொட்டும் மழையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கலெக்டருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

1,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

அதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாகவும், தற்காலிகமாக பொக்லைன் மூலம் மழைநீர் செல்ல உடனடியாக நடவடிக்கை எடுத்து, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

 தொடர்ந்து மழை நீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பேரணாம்பட்டு டவுன் வழியாக செல்லும் ரங்கம்பேட்டை கானாறு வெள்ளம் புதுவீதி, ஒத்தவாடை வீதி, தோப்பு வீதி, முல்லா வீதி, அஜிஜியா வீதி, தாஹிர் வீதி, நல்ல தண்ணீர்க் கிணறு வீதி, இதயாத் வீதி ரஷிதாபாத் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் புகுந்தது. இதனால் 300 வீடுகள் மழைநீரால் பாதிக்கப்பட்டன. இதேபோன்று ரகமதாபாத் பகுதி மற்றும் சப்போட்டா தோப்பு குதியில் 700-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்து அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு அருகிலுள்ள பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

குடியாத்தம்

குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் மற்றும் மொரசபல்லி பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழையால் மலைகளில் உற்பத்தியாகும் கொட்டாற்று வெள்ளம் எர்த்தாங்கல் ஏரியில் புகுந்து நெல்லூர்பேட்டை ஊராட்சி வெள்ளகுட்டை ஒட்டு பகுதியில் செல்லும் மோர்தானா அணை கால்வாயில் கலந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மோர்தானா அணை கால்வாயில் வரும் தண்ணீரை வேறு பகுதிக்கு திருப்பி விட உடனடியாக நடவடிக்கை வலியுறுத்தி  நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம்-பேரணாம்பட்டு சாலையில் லிங்குன்றம் அருகே நேற்று மாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 தகவல் அறிந்ததும் குடியாத்தம் உதவி கலெக்டர் தனஞ்செயன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லலிதா உள்ளிட்டோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நாளை காலை தண்ணீரை வேறு பகுதிக்கு திரும்பி விடுவதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.


Next Story