கலவை பகுதியில் 110.8 மில்லி மீட்டர் மழை


கலவை பகுதியில் 110.8 மில்லி மீட்டர் மழை
x
தினத்தந்தி 18 Nov 2021 11:44 PM IST (Updated: 18 Nov 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

கலவை பகுதியில் நேற்று 110.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

ராணிப்பேட்டை

கலவை பகுதியில் நேற்று 110.8 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் சாலைகள் துண்டிக்கப்பட்டன.

சாலைகள் துண்டிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நேற்று சென்னை, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. 

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாலை முதல் இடைவிடாது மழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. ஒரு சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் வெள்ளம் தேங்கி நின்றது. அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

கலவையில் இருந்து நல்லூர், மாந்தாங்கல், மேல்நல்லி செல்லும் சாலை நேற்று தொடர்ந்து பெய்த மழையால் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு நாட்களுக்கு முன்பு லேசாக நல்லூர் ஏரிகலங்கல் சாய்ந்தது. நேற்று பெய்த தொடர் மழையால் நெல்லூர் ஏரி கலங்கல் மூன்று அடிக்கு மேல் சாய்ந்து தண்ணீர் வெளியேறி 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் பயிர்களை தண்ணீர் சூழ்ந்தது. 

12 வீடுகள் சேதம்

நேற்று பெய்த தொடர் மழையினால் பெரும்பாலான இடங்களில் பயிர்கள் சேதம் அடைந்தது. இந்த தொடர் மழை காரணமாக வேலைக்கு சென்றவர்கள் வீட்டிற்கு திரும்ப மிகவும் சிரமப்பட்டனர்.‌ 

பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கினர். முக்கிய சாலைகள் மற்றும் தெருக்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு கூடுதலான நீர்வரத்து இருந்ததால், அதிக அளவில் உபரி நீர் வெளியேறியது. 12 வீடுகள் சேதம் அடைந்தது. 

அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
பொன்னை அணைக்கட்டில் இருந்து 39,181 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வாலாஜா பாலாறு அணைக்கட்டிலிருந்து 4 கால்வாய்கள் மற்றும் ஆற்றின் வழியாக 22,867 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. 

ஆற்றில் அதிக அளவில் நீர்வரத்து இருப்பதால் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை அளவு

கலவை - 110.8, அரக்கோணம் - 65, ஆற்காடு 70.6, நெமிலி - 79,  வாலாஜா - 93.7, அம்மூர் - 56.3, சோளிங்கர் - 58. மாவட்டம் முழுவதும் மொத்தம் 533.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Next Story