தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரிக்கு நிலம் தேர்வு தொடர்பான வழக்கு; கலெக்டரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தரகம்பட்டி அரசு கலைக்கல்லூரிக்கு நிலம் தேர்வு தொடர்பான வழக்கில் கலெக்டரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
கரூர் மாவட்டம் கடவூர் பகுதியை சேர்ந்த பெரியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டியில் அரசு கலை-அறிவியல் கல்லூரி தொடங்க தமிழக அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது. இதையடுத்து தற்காலிகமாக ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் கல்லூரி செயல்படுகிறது. இந்த நிலையில் இந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தரகம்பட்டியில் உள்ள பஸ் நிலையம் அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது. திடீரென அந்த பஸ்நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தனியார் இடத்தை தற்போது தேர்வு செய்துள்ளனர். இது அந்த பகுதி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு என தெரிகிறது. எனவே தரகம்பட்டி பஸ்நிலையம் அருகிலேயே கல்லூரி கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
முடிவில், இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 22-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story