பேக்கரி உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை


பேக்கரி உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 19 Nov 2021 1:24 AM IST (Updated: 19 Nov 2021 1:24 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே பேக்கரி உரிமையாளர் வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.8 லட்சம் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. மகளின் திருமணத்திற்காக வைத்திருந்ததை அள்ளிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம், 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள காராமணிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் அதே பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற 10-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ரவி, நேற்று முன்தினம் மகளின் திருமண பத்திரிகையை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.
மேலும் அவரது மகன் சந்தோஷ், பேக்கரியை பூட்டி விட்டு உறவினர் ஒருவருடன் படம் பார்ப்பதற்காக கடலூரில் உள்ள தியேட்டருக்கு சென்றார். பின்னர் படம் முடிந்ததும் சந்தோஷ், நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். 

நகை-பணம் கொள்ளை

அப்போது அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்து, வீட்டை பார்வையிட்டனர்.
அப்போது வீட்டின் மேற்கூரையில் ஓடுகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் ஓடுகளை பிரித்து, உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவா்கள் பீரோவை உடைத்து, அதில் ரவி தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

மிளகாய் பொடி தூவிய மர்மநபர்கள்

மேலும் போலீஸ் மோப்ப நாய் கண்டுபிடிக்காத வகையில் மர்மநபர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டு, பின்பக்க வாசல் வழியாக தப்பி சென்றதும் தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மகளின் திருமணத்திற்காக பேக்கரி உரிமையாளர் வைத்திருந்த நகை-பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story