ஒரே நாளில் 3 கடைகளில் திருட்டு
திருவட்டார் அருகே ஒரே நாளில் 3 கடைகளில் பணம், பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே ஒரே நாளில் 3 கடைகளில் பணம், பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
பலச்சரக்கு கடை
திருவட்டார் சந்தை அருகே சசி என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்பு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க சென்ற போது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், கடையில் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் 3 கடைகளில் கைவரிசை
அப்போது, பலசரக்கு கடையின் எதிர்புறம் உள்ள பத்மராஜ் என்பவரின் பழக்கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்து 14 வாழைக்குலைகள் மற்றும் பெட்டியில் இருந்த ரூ.7 ஆயிரம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
மேலும், இந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் ஒரு தனியார் பள்ளிக்கு செல்லும் வழியில் விஜயகுமார் என்பவரின் டீக்கடை பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.1,500 திருட்டு போயுள்ளது. அதன் அருகில் உள்ள சுவாமிதாஸ் எனபவரின் பேன்சி ஸ்டோர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில் அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். ஒரே நாளில் 4 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story