பெங்களூரு டாக்டரிடம் ரூ.2½ லட்சம் மோசடி; 2 பேருக்கு வலைவீச்சு


பெங்களூரு டாக்டரிடம் ரூ.2½ லட்சம் மோசடி; 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Nov 2021 2:33 AM IST (Updated: 19 Nov 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில், போலி தங்க நாணயங்களை விற்று பெங்களூரு டாக்டரிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிவமொக்கா:சிவமொக்காவில், போலி தங்க நாணயங்களை விற்று பெங்களூரு டாக்டரிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

போலீசில், டாக்டர் புகார்

பெங்களூரு, மத்திகெரே பகுதியை சேர்ந்தவர் சிவாஜிராவ். தனியார் ஆஸ்பத்திரி டாக்டர். இந்த நிலையில் டாக்டர் சிவாஜிராவ், சிவமொக்கா மாவட்டம் வினோபா நகர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். 
அந்த புகாரில், எனது (சிவாஜிராவ்) ஆஸ்பத்திரிக்கு, சிவமொக்காவை சேர்ந்த குமார் என்பவர் வந்து சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் கடந்த மாதம்(அக்டோபர்) 28-ந்தேதி என்னை, குமார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். 

ரூ.2½ லட்சம் மோசடி

அப்போது அவர், உங்களால் நான் குணமடைந்துள்ளேன். அதனால் உங்களுக்கு நன்றி கடனாக ஏதாவது உதவி செய்ய வேண்டும். அதற்காக தான் செல்போனில் தொடர்பு கொண்டேன். எனது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு திருமண செலவுக்கு பண நெருக்கடியில் உள்ளார். இதனால் அவர், தங்க நாணயத்தை குறைந்த விலைக்கு அதாவது ரூ2½ லட்சத்திற்கு விற்க முடிவு செய்துள்ளார். அதனால், உங்களுக்கு விருப்பம் இருந்தால் தங்கநாணயத்தை விலை கொடுத்து வாங்கிகொள்ளும்படி கூறினார்.    

இதனை நம்பி விருப்பம் ெதரிவித்த நானும் உடுப்பிக்கு வேலையாக சென்றபோது சிவமொக்காவிற்கு வந்து குமார், அவரது நண்பரிடம் ரூ.2½ லட்சத்தை கொடுத்து 2 தங்கநாணயத்தை பெற்றுக்கொண்டேன். 
இதையடுத்து பெங்களூருவுக்கு வந்து 2 தங்க நாணயங்களை நகையாக மாற்ற நகைக்கடையில் கொடுத்தேன். அப்போது நகைக்கடை ஊழியர்கள் சோதனை செய்தபோது போலி தங்கநாணயங்கள் என்பது தெரியவந்தது. அப்போது தான் போலி தங்கநாணயங்கள் கொடுத்து 2 பேரும் தன்னிடம் ரூ.2½ லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. ஆகையால் அவர்கள் 2 பேரையும் கைது செய்து பணத்தை திருப்பி பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

வலைவீச்சு

இதுகுறித்த அவரது புகாரின் பேரில் வினோபாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் டாக்டரிடம் பண மோசடி செய்த 2 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story