மோட்டார் சைக்கிள்-மினிலாரி மோதல்: வியாபாரி-2 மகன்கள் பரிதாப சாவு
சொரப் அருகே மோட்டார் சைக்கிள்-மினிலாரி மோதிய விபத்தில் 2 மகன்களுடன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவமொக்கா:சொரப் அருகே மோட்டார் சைக்கிள்-மினிலாரி மோதிய விபத்தில் 2 மகன்களுடன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மினி லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்
சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா சந்திரகுத்தி குசனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரப்பா(வயது 40). வியாபாரி. இவரது மனைவி பாக்கியம்மா. இந்த தம்பதிக்கு சஷாங்(11), ஆதர்ஷ்(5) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். மேலும் ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராமசந்திரப்பா தனது மனைவி பாக்கியம்மாவின் தாய் வீட்டிற்கு குடும்பத்துடன் புறப்பட்டார். அதன்படி மகளை, உறவினர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்தார்.
இதைதொடர்ந்து ராமசந்திரப்பா, பாக்கியம்மா, சஷாங், ஆதர்ஷ் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அவர்கள் சிராளகொப்பா-இரேகெரூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக சாலையில் எதிரே வந்த மினிலாரியும், ராமசந்திரப்பா சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
3 பேர் பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து ராமசந்திரப்பா, அவரது மனைவி மற்றும் மகன்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில், ராமசந்திரப்பாவும், அவரது 2 மகன்களும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து பரிதாபமாக பலியாகினர். பாக்கியம்மா பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தை பார்த்ததும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாக்கியம்மாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் அவருடைய உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிராளகொப்பா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சோகம்
இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு பிறகு 3 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். ராமசந்திரப்பாவின் மகள் உறவினர் ஒருவருடன் சென்றுவிட்டதால் அவள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.
இந்த விபத்து குறித்து சிராளகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Related Tags :
Next Story