நிலப்பட்டா வழங்கக் கோரி உயர்மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு


நிலப்பட்டா வழங்கக் கோரி உயர்மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 2:50 AM IST (Updated: 19 Nov 2021 2:50 AM IST)
t-max-icont-min-icon

நிலப்பட்டா வழங்கக் கோரி உயர்மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பூர்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி டால்மியா போர்டு பகுதியில் உயர் மின்கோபுரத்தில் ஆண் ஒருவர் ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறி கூச்சலிட்டார். இதனை கண்ட அந்த பகுதி மக்கள் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் உயர் மின்கோபுரத்தில் இருந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவரை தீயணைப்பு படைவீரர்கள் கோபுரத்தில் ஏறி கயிறு கட்டி பத்திரமாக கீழே இறக்கி வந்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் அண்ணாமலை (வயது 50) என்று கூறினார். அவருடைய மனைவி பெயர் ராமாயி என்றும், 2 மகள்கள் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் போலீசாரிடம் கூறும் போது, ‘வெள்ளக்கல்பட்டி காந்தி நகர் பகுதியில் தற்காலிகமாக வசித்து வருகிறோம். முன்னதாக கடந்த 25 ஆண்டுகளாக டால்மியா போர்டு எம்.ஜி.ஆர். நகர் ரெயில்வே நிலத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன் குடியிருந்து வந்தோம். அந்த இடத்தை ரெயில்வே போலீசார் அகற்றிய பின்னர் மாற்று இடம் தருவதாக கூறியிருந்தனர். ஆனால் இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், வீட்டுமனை வழங்கப்படவில்லை. இதனால் வீடு, நிலம், இல்லாமல் தவித்து வருகிறோம். இதில் விரக்தி அடைந்த நான் உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து கோபுரத்தில் ஏறினேன்’ என்றார். பின்னர் அவருக்கு தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தையொட்டி அந்த பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. 

Next Story