கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நேரத்தில் 50 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்: சென்னை மாநகராட்சி கமிஷனர்
ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரே நேரத்தில் 50 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.
கமிஷனர் ஆய்வு
பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகையில் மழை வெள்ளம் குறித்து புகார்கள் அளிக்க 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கனமழையால் தண்ணீர் தேங்க கூடிய தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. மழையால் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற 769 மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது. 10-ந்தேதி முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பையடுத்து மாற்று வழிகள் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு மக்களுக்காக 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை கன மழையை எதிர்கொள்ளும் வகையில் செயல்படுகிறது.
கடும் நடவடிக்கை
சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி உள்ளது. அதனை தொடர்ச்சியாக சரி செய்து வருகிறோம். வழக்கத்தைவிட கூடுதலாக 600 டன் முதல் 800 டன் வரை குப்பைகளை அகற்றி தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பிற நகராட்சிகளில் இருந்து 500 துப்பரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகாலில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்று தவறுகள் நிகழக்கூடிய இடத்தில் உள்ள பொதுமக்கள் மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்க வேண்டும். கடந்த இரு மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட வடசென்னைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நீர் இறைக்கும் மோட்டார்களும் இங்கு தான் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 50 பேர்
ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு ‘1913’ என்ற எண்ணுக்கு ஒரே நேரத்தில் 50 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனை கண்காணிப்பதற்கு தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து சுரங்கப்பாதைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story