திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு; தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்


திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு; தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 19 Nov 2021 5:16 PM IST (Updated: 19 Nov 2021 5:16 PM IST)
t-max-icont-min-icon

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் வீற்றிருக்கும் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும் கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெறும்.

அதன்படி நேற்று மாலை 6.45 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் கவசம் திறக்கப்பட்டு சுவாமிக்கு புனுகு சாம்பிராணி அபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு புனுகு சாம்பிராணி தைலம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

நாளை(சனிக்கிழமை) வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். அப்போது ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்கலாம். 20-ந்தேதி இரவு அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.

ஆண்டுக்கொரு முறை 3 நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் சித்ரா தேவி மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.


Next Story