முதுமலை புலிகள் காப்பகத்துடன் கூடலூர், ஊட்டி வனக்கோட்டம் இணைப்பு


முதுமலை புலிகள் காப்பகத்துடன் கூடலூர், ஊட்டி வனக்கோட்டம் இணைப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 7:29 PM IST (Updated: 19 Nov 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பகத்துடன் கூடலூர், ஊட்டி வனக்கோட்டம் இணைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.

கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்துடன் கூடலூர், ஊட்டி வனக்கோட்டம் இணைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர்.

ஊட்டி, கூடலூர் வனக்கோட்டங்கள்

நீலகிரி மாவட்டம் சுமார் 64 சதவீத வனப்பகுதியை கொண்டது. இங்கு காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைப்புலிகள் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த மாவட்டத்தில் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. 
இது தவிர ஊட்டி, கூடலூர் வனக்கோட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 

இவை கோவை மண்டல வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்தன. இதன் காரணமாக இங்கு பணியாற்றும் வனத்துறையினர் அலுவல் ரீதியான உத்தரவுகள் பெறவும், ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவும் கோவைக்கு சென்று வர வேண்டிய நிலை இருந்தது. இதனால் கால விரயம் மற்றும் வீண் செலவு ஏற்பட்டு வந்தது.

முதுமலையுடன் இணைப்பு

இந்த நிலையில் கூடலூர், ஊட்டி வனக்கோட்டங்கள் கோவை மண்டலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தின் கீழ் இணைக்கப்பட்டு உள்ளது. 

இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனராக உள்ள வெங்கடேசுக்கு, நீலகிரி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் பொறுப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதேபோன்று பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகம், கோவை மண்டல நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது. 

வரவேற்பு

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர். மேலும் வனத்துறையினர் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பகத்துடன் ஊட்டி, கூடலூர் வனக்கோட்டங்கள் இணைக்கப்பட்டு இருப்பது வரவேற்கக்கூடியது. 

குறிப்பாக வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் புதிய நிர்வாகத்தின் கீழ் உடனுக்குடன் கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றனர்.


Next Story