முத்தூர் அருகே கடன் பிரச்சினையால் ஆடு வியாபாரி, 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை


முத்தூர் அருகே கடன் பிரச்சினையால் ஆடு வியாபாரி, 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Nov 2021 9:13 PM IST (Updated: 19 Nov 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

முத்தூர் அருகே கடன் பிரச்சினையால் ஆடு வியாபாரி, 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை

முத்தூர்,
முத்தூர் அருகே கடன் பிரச்சினையால் ஆடு வியாபாரி, 2 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆடு வியாபாரி
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ஊடையம், துத்திக்குளத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 29). இவரது மனைவி காயத்ரி (27). இவர்களது குழந்தைகள் தேஜஸ்வி (4), சுவஸ்தி (2).
 ஜெகன் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள காசிபாளையத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஆடு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது 2 குழந்தைகளையும் அழைத்து கொண்டு தனது சொந்த ஊரான துத்திக்குளத்திற்கு வந்தார்.
அங்கு ஜெகன், தனது குழந்தைகளுடன் வெளியே சென்று வருவதாக உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு இரவு நீண்ட நேரம் ஆகியும் ஜெகனும், அவரது 2 குழந்தைகளும் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து ஜெகனின் உறவினர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நள்ளிரவில் கிராமத்தின் அருகில் உள்ள ஒரு கிணற்றில் ஜெகனின் உடல் மிதந்தது. இதனைப் பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள்
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் கிணற்றில் இறங்கி முதலில் ஜெகனின் உடலை மீட்டனர். பின்னர் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேற்று காலை  தேஜஸ்வி, சுவஸ்தி உடல்களை மீட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று காலை காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
கடன் பிரச்சினை
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடன் பிரச்சினை காரணமாக ஜெகன், தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஆடு வியாபாரி தனது 2 பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முத்தூர் பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

---

Next Story