திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது


திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2021 9:56 PM IST (Updated: 19 Nov 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மலைக்கோட்டை கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மலைக்கோட்டை உச்சியில் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த சாமி சிைலகள், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வரை கோவிலில் சாமி சிலைகள் எதுவும் இல்லை. இதனால் கோவிலில் வழிபாடுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனினும் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
அதேபோல் திருக்கார்த்திகை திருநாளிலும் சிலர் கிரிவலம் செல்வார்கள். இதற்கிடையே மலைக்கோட்டை கோவிலில் மீண்டும் சாமி சிலைகளை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்த வேண்டும் என்று இந்து அமைப்பினரும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் திருக்கார்த்திகை திருநாளில் மலைக்கோட்டை கோவிலில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
தீபம் ஏற்ற முயற்சி 
இந்த நிலையில் நேற்று திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், திருக்கார்த்திகை திருநாளில் மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் செல்ல அனுமதி இல்லை என்று கலெக்டர் விசாகன் அறிவித்தார். இதையடுத்து மலைக்கோட்டை நுழைவுவாயில் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.
இதற்கிடையே மலைக்கோட்டை கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற போவதாக இந்து மக்கள் கட்சி சத்திரியர்கள் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் முன்பு இந்து மக்கள் கட்சியினர் திரண்டனர். அங்கு கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு, மலைக்கோட்டை கோவிலில் தீபம் ஏற்ற புறப்பட்டனர்.
அப்போது வேல், தீபம் ஏற்றுவதற்கு 2 கொப்பரைகள் ஆகியவற்றுடன் கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். சிறிது தூரம் சென்ற நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா, சிவசேனா மாநில அமைப்பாளர் சி.கே.பாலாஜி உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story