திருக்கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் திருக்கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு நடந்தது.
திண்டுக்கல்:
அபிராமி அம்மன் கோவில்
கார்த்திகை மாதத்தில் வரும் பவுர்ணமி நாளில் சிவன், முருகன் கோவில்களில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்துதல் உள்பட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீப சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் ஞானாம்பிகை-காளகத்தீசுவரர், அபிராமி அம்மன் -பத்மகிரீசுவரருக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
9.30 மணியளவில் வள்ளி தெய்வானை சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன்பின்னர் மாலை 5 மணியளவில் கோவில் உள்பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்று கோவில் மகா மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல், மகா தீபாராதனை நடைபெற்றது.
இரவு 7 மணியளவில் கோவிலின் முன்பு சொக்கப்பனை கொளுத்துதல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அகல் விளக்குகள்
இதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்திவிநாயகர் கோவிலில் வள்ளி தெய்வானை முருகனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
மேலும் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், என்.ஜி.ஓ. காலனி தண்டாயுதபாணி சுவாமி கோவில், ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோவில் உள்பட நகரின் முக்கிய கோவில்களில் திருக்கார்த்திகை தீப சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கார்த்திகையையொட்டி திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் இல்லங்களில் ஏராளமான அகல் விளக்குகளை ஏற்றினர். இதனால் நகரின் வீதிகள் அகல் விளக்கின் தீப ஒளியில் ஜொலித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
திருமலைக்கேணி
நத்தம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உள், வெளி பிரகாரங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதுபோல நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், காளியம்மன், பகவதி அம்மன், விநாயகர் கோவில்களில் பக்தர்கள் கார்த்திகை தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவிலின் முன்பு அமைந்துள்ள தீப கோபுரத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் செங்குறிச்சி, கம்பிளியம்பட்டி, திண்டுக்கல், வி.எஸ்.கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கோபால்பட்டி
கோபால்பட்டி காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள முருகன் சன்னதியில் நேற்று திருக்கார்த்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு விபூதி, பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகை பொருட்களுடன் அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் முருகனை வழிபட்டனர். இதுபோல மாவட்டம் முழுவதும் கோவில்களில் திருக்கார்த்திகை தீப சிறப்பு வழிபாடு நடந்தது.
பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் 1,113 தீபங்கள் ஏற்றப்பட்டன. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடந்தது.
அய்யம்பாளையம் குமரன் குன்றில் அமைந்துள்ள அருள் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி முருகனுக்கு சந்தனம், பால் மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதேபோல் சித்தரேவு வரதராஜ பெருமாள் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story