திருமணமான 6 மாதத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய இளம் பெண் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்
திருமணமான 6 மாதத்தில் இளம் பெண் தூக்கில் பிணமாக தொங்கினாா்.
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் தாலுகா ஜெயங்கொண்டப்பட்டினம் அருகே உள்ள அம்பிகாபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் புரட்சிமணி (வயது 25). பெயிண்டர். இவருக்கும் புவனகிரி தாலுகா பெரியகுமட்டி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகள் கவிப்பிரியா (21) என்பவருக்கும் கடந்த மே மாதம் 7-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
கணவர் வீட்டில் இருந்த கவிப்பிரியா நேற்று மதியம் வீட்டின் உத்திரத்தில் தூக்கு போட்டு இறந்துவிட்டதாக நடராஜனுக்கு தகவல் சென்றுள்ளது. உடன் நடராஜன் மற்றும் அவர் குடும்பத்தினர் நேரில் வந்து பார்த்தனர்.
பின்னர் இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன கவிப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கவிபிரியாவுக்கு திருணமாகி 6 மாதங்களே ஆவதால், வரதட்சணை கொடுமையால் இறந்தாரா என்று சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story