மழைக்கு 7 பேர் பலி


மழைக்கு 7 பேர் பலி
x
தினத்தந்தி 19 Nov 2021 11:44 PM IST (Updated: 19 Nov 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விழுப்புரம், 

விழுப்புரம், கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களாக கனமழையாக கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அதுபோல் ஏரிகள், குளங்களும் நிரம்பி தண்ணீர் அதன் வரத்து வாய்க்கால்கள் மற்றும் ஓடைகளிலும் சீறிப்பாய்ந்து செல்கிறது.  நீர்நிலைகளை கடந்து செல்லும்போது தவறி விழுந்தும், குளிக்க செல்லும்போதும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி சிலர் இறந்து வருகின்றனர்.  அந்த வகையில் நீரில் மூழ்கி 7பேர் இறந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

நீரில் மூழ்கினார்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்த பள்ளிநேலியனூரை சேர்ந்தவர் வீரமணி (வயது 45) என்பவர் அதே பகுதியில் உள்ள ஓடை வாய்க்காலில் இறங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி அவர் இறந்தார்.
இதேபோல் வானூர் தாலுகா ராயப்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் சிங்காரம் (80). இவர் கூனிமேட்டில் உள்ள தனது மகள் செல்வி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வண்ணான்குளத்துக்கு கால் கழுவ சென்றபோது வழுக்கி குளத்துக்குள் விழுந்த சிங்கராம் நீரில் மூழ்கி இறந்தார்.

தொழிலாளி

மேலும் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி (66) மேய்ச்சலுக்கு சென்றிருந்த மாடுகளை பிடித்து தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகையில் கட்டுவதற்காக அங்குள்ள ஓடைக்கு அருகில் சென்றார். அப்போது ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதே போல் அரகண்டநல்லூரை அடுத்த முகையூர் பகுதியை சேர்ந்தவர் மகிமைரோணிஜோஸ்(30). தொழிலாளியான இவர் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள முகையூர் ஏரிக்கு மீன்பிடிக்க சென்றபோது ஏரியில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டமங்கலம், மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், அரகண்டநல்லூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டாச்சிபுரம் 

கண்டாச்சிபுரம் அருகே உள்ள வி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விபூஷன் மகன் முனியப்பன்(வயது 39). இவர், அதே ஊரில் உள்ள தனது நிலத்திற்கு சென்றார். அப்போது சின்ன ஏரி ஓடையில் தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கில் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மூங்கில்துறைப்பட்டு 

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). விவசாயி. இவர் நேற்று காலை நடந்து சென்றபோது, கடுவனூர் ஏரி உபரிநீரில் அடித்துச்செல்லப்பட்டு, நீரில் மூழ்கி பலியானார். அவரது உடலை சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராம ஏரி கோடி வாய்க்கால் ஓடையில் புதுக்கோட்டை மாவட்டம் கங்கனப்பட்டி கிராமத்தை சேர்ந்த முத்தாண்டி அம்பலத்தார் மகன் சுப்பையா (42) என்பவர் மீன்பிடித்தார். அப்போது தவறி விழுந்த அவர், ஓடையில் மூழ்கி பலியானார். 

Next Story